பாவத்தின் சுதந்திரம் அடிமைத்தனம்

இந்த உலகத்தின் தேவனுடைய வேலை, நம்மை ஆவிக்குரிய உண்மைகளைப் பற்றி அறியாதவர்களாக வைத்து, ஏமாற்றத்தில் வைத்திருப்பதாகும். அவன் காரியங்களைத் தலைகீழாகப் புரட்டுகிறான். வெளிப்புறமான காரியங்களைக் கொண்டு தொடர்ந்து ஏமாற்றுகிறான். மகிழ்ச்சி, ஞானம் மற்றும் சுதந்திரம் பற்றி மனிதர்களை ஏமாற்றுகிறான். பணக்காரர்களும் செழிப்பானவர்களும் உண்மையாகவே மகிழ்ச்சியானவர்கள் என்று தொடர்ந்து பொய் சொல்லி, அனைவரையும் நம்ப வைக்கிறான்.

வேதத்தின் வேலை, அவனுடைய ஏமாற்றத்திலிருந்து நம்மை விடுபடுத்துவதாகும். வேதம் சொல்லுகிறது, வெளிப்படையாகப் பணக்காரர்கள் அல்ல, ஆனால் ஆவியில் ஏழைகள், துக்கப்படுகிறவர்கள், நீதிநிமித்தம் துன்புறுத்தப்படுகிறவர்கள், சுத்த இருதயமுள்ளவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள் ஆகியோரே மகிழ்ச்சியானவர்கள் (மத்தேயு 5). அவன் ஞானத்தைப் பற்றியும் பொய் சொல்கிறான்: ஏமாற்றி, எல்லா விதமான மோசடிகளையும் செய்து, இந்த உலகில் வெற்றி பெறுபவர்களே ஞானிகள் என்று கூறுகிறான். ஆனால் வேதம் சொல்லுகிறது, உலகத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்கள் ஆத்துமாவை இழந்துவிடுகிறார்கள். இவர்களே மகா மூடர்கள். இரட்சிப்புக்கு ஞானமுள்ளவர்களும், தேவனிடத்தில் ஐசுவரியவான்களாக இருப்பவர்களும், வரப்போகும் உலகத்தின் மீது கவனம் செலுத்துபவர்களுமே மகா ஞானிகள்.

அதேபோல், பிசாசு சுதந்திரத்தைப் பற்றியும் பொய் சொல்கிறான். எல்லா மனிதர்களும் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். இதுதான் இந்த உலகின் பெரிய ஏமாற்றம். சுதந்திரம் என்பது எந்த வரம்பும் இல்லாமல் நமக்குத் தோன்றியதை எல்லாம் செய்வதே என்று அவன் போதிக்கிறான். தேவனுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிதல், அவரோடு கண்டிப்பான நடை, அவருடைய வார்த்தையைப் படித்தல், ஜெபித்தல் ஆகியவை ஒரு சிறைச்சாலையும் அடிமைத்தனமும் போலத் தோன்றுகிறது. விதிகள் அல்லது கட்டுப்பாடு என்றால் “ஆ.. விதிகள், விதிகள்… கட்டுப்பாடு…” என்று நம் பிள்ளைகளும் சில நேரங்களில் உணர்கிறார்கள். எந்தக் கட்டுப்பாட்டிற்கும் பொறுமையற்றவர்களாக இருக்கிறார்கள்; அது நம்மை வரம்புக்குட்படுத்தும் ஒரு சங்கிலி என்று நினைக்கிறார்கள். “எப்போது எனக்குப் பிடித்தை எல்லாம் கட்டுப்பாடின்றிச் செய்யவும், எனக்குத் தோன்றியதை எல்லாம் பேசவும் சுதந்திரம் கிடைக்கும்?” என்று நினைக்கிறார்கள். அவர்கள் கட்டுப்பாட்டை ஒரு சுமையாகப் பார்க்கிறார்கள், எந்தக் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுபட விரும்புகிறார்கள். பிசாசு அதுதான் சுதந்திரம் என்று அவர்களை நினைக்க வைத்துவிட்டான்.

போதுமான பணம், போதுமான நேரம், போதுமான வசதி, உடல்நலம் இருந்தால் நமக்குத் தோன்றியதை எல்லாம் செய்ய முடியும் என்று நாமும் கூட நினைக்கிறோம். நம்மில் பெரும்பாலோர் அப்படித்தானே நினைக்கிறோம்? அந்த திசையில் சென்ற அனைவரும், தாங்கள் மேலும் மேலும் அடிமைகளாக மாறியதை உணர்ந்திருக்கிறார்கள். இதை நன்றாகக் கற்றுக்கொள்ளுங்கள்: தேவனுடைய சட்டத்தின் கட்டுப்பாடு இல்லாத மாம்ச இச்சையின் சுதந்திரம் மிக மோசமான அடிமைத்தனம்.

அது ஏன் மிக மோசமான அடிமைத்தனம் என்பதற்கான ஐந்து காரணங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.


1. அது நம் சொந்த இச்சைகளின் சிறைச்சாலை

தேவன் நமக்கும் உங்களுக்கும் கொடுக்கக்கூடிய மிக மோசமான தண்டனை அவருடைய பயங்கரமான நியாயத்தீர்ப்பாகும். உண்மையான மகிழ்ச்சி தேவனை மகிமைப்படுத்துவதிலும் அவரை அனுபவிப்பதிலும் உள்ளது என்று அவர் நீண்ட பொறுமையுடன் மீண்டும் மீண்டும் போதித்த பிறகும், நாம் அதைவிட்டு உலகத்தை நோக்கி ஓடுகிறோம். நிறைய பொறுமை காட்டிய பிறகு, நம்மைத் திருத்த முயற்சித்த பிறகு, நாம் அவருடைய எல்லைகளை மீற விரும்புகிறோம் என்பதை அறிந்து, அவர் நம்மை நம்முடைய இருதய இச்சைகளின் ஆளுகைக்கு ஒப்புக் கொடுக்கிறார்; அவை விரும்பியதை எல்லாம் செய்ய அனுமதித்து, நாம் கட்டுப்பாடில்லாமல் நம்மை அழித்துக்கொள்ளும் நிலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.

ரோமர் 2-இல் சொல்லியிருப்பது போல், அவர்கள் தங்கள் இருதயங்களின் இச்சைகளுக்கும், சீர்கெட்ட மனதிற்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். சங்கீதம் 81:12 சொல்கிறது: “ஆகையால் நான் அவர்களுடைய இருதயக் கடினத்திற்கே அவர்களை விட்டுவிட்டேன்; தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள்.” நம் மிருகத்தனமான இச்சைகளுக்கு நாம் விடப்பட்டுவிடுகிறோம். நம் இச்சைகள் எவ்வளவு பயங்கரமான கொடுங்கோன்மைகள் என்று உங்களுக்குத் தெரியாது. அவை நமக்கு ஒரு சிறைச்சாலையை உருவாக்குகின்றன, பல்வேறு சங்கிலிகளைப் போட்டு நம்மை வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்கின்றன. இந்த மாம்ச இச்சையின் சுதந்திரம் ஒரு மனிதனைத் தன் சீர்கெட்ட இருதயத்தைப் பின்பற்றும்படி அடிமைத்தனமாகச் செய்கிறது, மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவரை அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கான வழிமுறைகளை அழித்துவிடுகிறது.

உலக மக்கள் இந்தச் சுதந்திரத்தை மீன்கள் தண்ணீரில் இருப்பதுபோல அனுபவிக்கலாம், ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் அடிமைகளே. அவர்கள் ஒரு ஆவிக்குரிய சிறைச்சாலையில் இருக்கிறார்கள். இதுவே உண்மையான மற்றும் முழுமையான அடிமைத்தனம். அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் மாயையைத் துரத்துவதில் செலவிடுகிறார்கள். அது அவர்களுக்கு ஒருபோதும் உண்மையான மகிழ்ச்சியைத் தரப்போவதில்லை. அவர்களுக்குள் ஆழமான வெற்றிடத்துடன் வாழ்கிறார்கள், ஏனென்றால் நாம் தேவனை அனுபவித்து அவருக்குக் கீழ்ப்படியும்போதே மகிழ்ச்சியாக இருக்கும்படி படைக்கப்பட்டிருக்கிறோம். வாழ்க்கையின் இன்பங்கள், கௌரவங்கள், இலாபங்கள், செல்வம் ஆகியவை தேவனுடைய மகிமைக்காகத் தேடப்படும்வரை ஒருபோதும் உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுவராது.

இன்பம், மகிழ்ச்சி, மனதின் மற்றும் உடலின் திருப்தி ஆகியவை நாம் தேவனை மகிமைப்படுத்தும்போது மட்டுமே நம்மை மகிழ்ச்சியாக ஆக்குவதற்குத் துணைபுரியும். இந்த விஷயங்கள் தங்களுக்காகவே விரும்பப்படக்கூடாது, ஆனால் நம்முடைய பெரிய இலக்கை அடைவதற்காகவே விரும்பப்பட வேண்டும். ஆனால் அவை நம்முடைய ஆசைகளை மயக்கி, அடிமைப்படுத்தி வைக்கும்போது, அவை நம்முடைய சிலைகளாக மாறுகின்றன, நாம் அவற்றுக்கு எஜமானர்களாகிவிடுகிறோம், அவை நம்முடைய சுதந்திரத்தைப் பறித்துவிடுகின்றன; நாம் அதிக அடிமைகளாகிறோம்.


2. மாம்ச இச்சையின் சுதந்திரம் ஒழுங்கற்ற ஆத்துமாவை உருவாக்குகிறது

இந்த “சுதந்திரம்” நம் ஆத்துமாவின் அமைப்பில் பெரும் சீர்குலைவை உருவாக்கி, நம்மை அடிமைகளாக்குகிறது. ஆத்துமாவின் சரியான ஒழுங்கு என்னவென்றால், மனம் மற்றும் மனசாட்சி முதலில் எது சரி, இது தேவனை மகிமைப்படுத்துமா மற்றும் என்னை மகிழ்ச்சியாக்குமா என்று தீர்மானிக்க வேண்டும். மனிதன் மனம் மற்றும் மனசாட்சியால் ஆளப்படும்படி படைக்கப்பட்டான். இவை இரண்டும் இருதயத்தையும், சரியான உணர்ச்சிகளையும் தூண்டி, விருப்பத்தையும், உடல் உறுப்புகளையும் தூண்டி சரியான செயல்கள் வரச் செய்யும். ஆனால் இந்த பாவம் நிறைந்த “சுதந்திரம்” முழு ஒழுங்கையும் தலைகீழாக மாற்றி, மனிதனை அடிமைப்படுத்தப்பட்ட ஒரு மிருகத்தைப் போல ஆக்குகிறது.

உடலில் தலை இருக்க வேண்டிய இடத்தில் கால்களும், கால்கள் இருக்க வேண்டிய இடத்தில் தலையும் இருந்தால், எவ்வளவு சீர்குலைவு இருக்குமோ, அதேபோல, உலகக் காரியங்கள் சுயநல இச்சைகளுக்காகத் தேடப்பட்டு, தேவனுடைய மகிமைக்காகத் தேடப்படாதபோது ஆத்துமாவில் சீர்குலைவு ஏற்படுகிறது. இந்த அடிமைத்தனம் ஒரு தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியது; இந்த ஒழுங்கு முற்றிலும் தலைகீழாக மாறியது. வெளிப்படையான இன்பங்கள் புலன்களைப் பாதிக்கின்றன, அவை இருதயத்தைப் பாதிக்கின்றன, அவற்றின் வலிமையால் மனம் மற்றும் மனசாட்சிக்கு எதிராகச் செயல்படுகின்றன. அது சரியானதல்ல, முட்டாள்தனம் என்று தெரிந்தாலும், ஒருவனுடைய விருப்பம் அடிமைத்தனமாகப் பிடித்துச் செல்லப்படுகிறது, அவன் குருடாக்கப்படுகிறான், அதனால் அவன் தன் சொந்த அழிவுக்குத் தலைகீழாகச் செல்கிறான். பகுத்தறிவுக்குப் பதிலாக இச்சை சிம்மாசனத்தைப் பிடித்துக்கொள்கிறது.


3. நாம் நம்முடைய இச்சைகளுக்கு அடிமையாகி விடுகிறோம்

பாவத்தின் பெரிய கொடுங்கோன்மையையும் வல்லமையையும் கருத்தில் கொள்ளுங்கள். அது ஒரு மனிதனின் தன்னை மற்றும் தன் செயல்களைக் கட்டுப்படுத்தும் உரிமையையும் அதிகாரத்தையும் பறித்துவிடுகிறது. அவர்கள் பல சமயங்களில் மாறவும், சில பழக்கங்களை நிறுத்தவும் விரும்புகிறார்கள், ஆனால் அவர்களால் முடியாது. அடிமைத்தனத்தின் வல்லமை, தங்களை அழிக்கும் என்று தெரிந்தும், கட்டாயப்படுத்தி அவற்றைச் செய்யும்படி இழுத்துச் செல்கிறது. பாவம் கட்டளையிடுகிறது, அவர்கள் கீழ்ப்படிகிறார்கள், “வேண்டாம்” என்று சொல்ல முடியாது.

இந்த அடிமைத்தனம் சில மன உளைச்சல், குற்ற உணர்வு, அல்லது உடல்நலப் பிரச்சினைகள், சங்கடங்கள், அவமானம், அல்லது இழப்பு ஆகியவற்றின் காரணமாக வருத்தப்படும் நபர்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமானதாக இருக்கிறது. ஆனாலும், அவர்கள் எதை எதிர்கொண்டாலும், தங்கள் இச்சைகளை விட முடியவில்லை. எனவே, நம்பிக்கையற்ற நிலையில், அடிமைகளாகவே தொடர்ந்து செல்லத் தீர்மானிக்கிறார்கள். ரோமர் 7:14 சொல்கிறது: “நான் மாம்சத்துக்குரியவன், பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டவன்.” சீர்கெட்ட உணர்வுகள், ஓட்டுநருக்குக் கீழ்ப்படியாத, ஆனால் அவரை அழிவுக்கு இழுத்துச் செல்லும் காட்டுக்குதிரைகளைப் போன்றது. தீத்து 3:3 சொல்கிறது: “பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் ஊழியம் செய்து.” ஒருவன் தன்னைத் தன் சொந்த ஆசைகளுக்கு ஒப்புக்கொடுக்கும்போது, அவன் ஒரு உண்மையான அடிமையாகிறான். ரோமர் 6:16 கேட்கிறது: “நீங்கள் எவனுக்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அவனுக்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்கள்.” எனவே, ஒரு மாம்சத்துக்குரிய மனிதன் ஒரு அடிமை என்று செலூசியாவின் பாசில் அழைக்கிறார். அவன் தன் சொந்த உணர்ச்சி மற்றும் சீர்கெட்ட ஆசைகளின் தேரால் இழுத்துச் செல்லப்படுகிறான். அவனால் சரியாகத் தூங்கவோ, சிந்திக்கவோ, உணரவோ முடியாது. மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார்.


4. இந்த அடிமைத்தனம் நடைமுறையால் ஆழமாகிறது

பாவம் ஒரு உடைக்க முடியாத பழக்கமாக மாறுகிறது. நாம் எவ்வளவு அதிகமாகப் பாவம் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அது நம்மை அடிமைப்படுத்துகிறது. இது ஒரு ஆணியைப் போன்றது; அது எவ்வளவு அதிகமாக அடிக்கப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக மரத்தில் பதியப்படுகிறது. இது ஒரு குணப்படுத்த முடியாத நோயைப் போன்றது, அது நடைமுறையில் மோசமாகிறது. எது சரி என்று நமக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் நம்மால் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் பாவம் நம்மை முழுமையாகப் பிடித்துள்ளது. இதுவே அடிமைத்தனத்தின் உச்சபட்ச வடிவம்—நீங்கள் விரும்பினாலும் உங்களால் உங்களுக்கு உதவ முடியாமல் இருப்பது. எரேமியா 13:23 சொல்கிறது: “எத்தியோப்பியன் தன் தோலின் நிறத்தையும், சிறுத்தை தன் புள்ளிகளையும் மாற்ற முடியுமா? அதேபோல், தீமை செய்யப் பழகியவர்களும் நன்மையைச் செய்ய முடியுமா?”

முதலில் ஒரு மனிதன் ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தின் மூலம் தன்னை ஒரு ஊழியனாகப் பாவத்துக்கு ஒப்புக்கொடுக்கிறான். பின்னர், அவன் போரில் அடிமைப்படுத்தப்படுகிறான். “கர்த்தாவே, நான் ஒரு அடிமை; நான் என் விருப்பத்தை என் சத்துருவுக்குக் கொடுத்தேன், அதை எனக்குக் கட்டுப்படுத்தி, உம்மிடமிருந்து என்னைப் பிரிப்பதற்காக அவன் ஒரு சங்கிலியாக மாற்றினான். நான் உமக்கு எதிராகப் பாவம் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது.” இப்படி நாம் கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப்படுத்தப்படுகிறோம்.


5. அடிமைகளாக நாம் எப்போதும் பயம் மற்றும் பயங்கரத்தின் வாழ்க்கையை வாழ்கிறோம்

பாவத்தில் வாழ்வது ஒரு நிலையான, ஆழமான பயத்தைக் கொண்டுவருகிறது. நாம் மரணம், நியாயத்தீர்ப்பு மற்றும் நம் செயல்களின் விளைவுகளைப் பற்றிப் பயப்படுகிறோம். இந்த பயம் ஒரு கொடுமையான எஜமானனைப் போன்றது, அது எப்போதும் நம்முடன் இருந்து உண்மையான சமாதானத்தை நாம் பெறுவதைத் தடுக்கிறது. தொடர்ச்சியான பயத்தில் வாழும் வாழ்க்கை சுதந்திரத்திற்கு எதிரானது.

பாவியின் உள்ளத்தில் ஒரு நெருப்பு அணைக்கப்பட்டு இருக்கிறது, சில சமயங்களில் அது உண்மையான பதட்டத்திலும் பயங்கரத்திலும் வெடிக்கிறது. அப்படிப்பட்ட வாழ்க்கை வாழும் ஒருவர், மரணம், நரகம் அல்லது நியாயத்தீர்ப்பு பற்றிய செய்திகளைக் கேட்டால் நடுங்காமல் இருக்க முடியாது. அவர்கள் இந்த விஷயங்களைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத் துணிவதில்லை. அவர்கள் எப்போதும் நசுக்கும் மனசாட்சியோடும் பயத்தோடும் வாழ்கிறார்கள். வாழ்க்கையில் சிறிய நிகழ்வுகள்—சிறிய பொருட்கள், இடி, பூகம்பம், போர் பற்றிய செய்திகள், சில உடல்நலப் பிரச்சினைகள்—எல்லாம் அவர்களுடைய ஆத்துமாவில் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு கொடுமையான எஜமானன் எப்போதும் அவர்களைப் பயத்தில் வைத்திருப்பான்.

இதை நீங்கள் ஒரு சுதந்திரமான, சந்தோஷமான வாழ்க்கை என்று சொல்கிறீர்களா? நான் இதை பாவத்திற்கு அடிமைப்பட்ட ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கை என்று சொல்கிறேன்.

அப்படிப்பட்ட பாவிக்கு ஒரே ஒரு விடுதலை, தன் அடிமைத்தனத்தை உணர்ந்து இயேசு கிறிஸ்துவின் மூலம் தன் பாவத்திலிருந்து விடுதலையைத் தேடுவதே.

Leave a comment